Thursday, September 10, 2015

ஆம் ஆத்மி போல ஆட்சியை பிடிப்போம்: ராமதாஸ்

பா.ம.க. நிறுவன தலைவர் ராமதாஸ் நெல்லையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, 

அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகள் இல்லாத கூட்டணி பா.ம.க. தலைமையில் ஏற்படும். எல்லோரும் நாங்கள் தான் அடுத்த முதல்வர் என்கிறார்கள். ஆனால் அந்த கட்சிகள் தேர்தல் நேரத்தில் தி.மு.க. அல்லது அ.தி.மு.க.வோடு சேர்ந்து விடும். கருத்துகணிப்பு சரியானது அல்ல. ஆம் ஆத்மி, மம்தா பானர்ஜி போன்றவர்கள் கட்சி ஆரம்பித்த சில மாதங்களில் ஆட்சியை பிடித்தது போல பா.ம.க. ஆட்சியை பிடிக்கும்.

இதற்காக மண்டல மாநாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. திருச்சியில் வருகிற 20–ந் தேதி மாநாடு நடக்கிறது. நெல்லையில் அக்டோபர் மாதம் 11–ந் தேதி நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்கள் சார்பாக மண்டல மாநாடு நடக்கிறது என்றார்

Tuesday, September 8, 2015

நான்கரை ஆண்டில் 9000 படுகொலைகள், 88,500 கொள்ளைகள்: வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு: ராமதாஸ்

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் காமேஷ் என்பவர் அவருடன் பயணம் செய்த போக்கிலி ஒருவரால் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இதற்காக போக்கிலி பயன்படுத்தியது கள்ளத் துப்பாக்கி என்று விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. 

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பரவி வரும் துப்பாக்கி கலாச்சாரம் பற்றிய தகவல்கள் மிகவும் அதிர்ச்சியளிப்பவையாக உள்ளன. சென்னையில் மட்டும் 5,000 பேரிடம் கள்ளத் துப்பாக்கி இருப்பதாகவும்,  தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் கள்ளத்துப்பாக்கிகள் தாராளமாக புழக்கத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஒரு கள்ளத்துப்பாக்கி ரூ.1500 என்ற விலையில் விற்பனை செய்யப்படுவதாகவும், தென் மாநிலங்களின் சட்டவிரோத கள்ளத்துப்பாக்கி சந்தையாக தமிழகம் உருவெடுத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. பிகார், மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் தயாரிக்கப்படும் இத்தகைய துப்பாக்கிகள் அங்கிருந்து பல்வேறு வழிகளில் கடத்தி வரப்பட்டு இங்கு விற்பனை செய்யப்படுகின்றன.

தமிழகத்தில் கள்ளத்துப்பாக்கிகள் புழக்கத்தில் இருப்பதோ, இங்கிருந்து தான் பிற மாநிலங்களுக்கு  விற்பனை செய்யப்படுகின்றன என்பதோ காவல்துறையினருக்கு தெரியாத உண்மை இல்லை. காவல்துறை அதிகாரிகளுக்கு நன்றாகத் தெரிந்து தான் கள்ளத் துப்பாக்கிகள் விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சென்னை கோயம்பேடு, கிழக்கு கடற்கரை சாலை போன்ற பகுதிகளில் வட இந்திய மாணவர்கள் சிலர் துப்பாக்கிகளுடன் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியான போதே தமிழகத்தில் கள்ளத்துப்பாக்கி கலாச்சாரத்தை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று வலியுறுத்தினேன். தமிழக அரசும், காவல்துறையும் அந்த விஷயத்தில் கவனம் செலுத்தியிருந்தால் இப்போது இந்த நிலை ஏற்பட்டிருக்காது. மாறாக ஆட்சியாளர்கள் அலட்சியம் காட்டியதால் தான் கள்ளத் துப்பாக்கிக் கலாச்சாரத்தை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம் என்ற நிலைமை இப்போது ஏற்பட்டிருக்கிறது.
துப்பாக்கி கலாச்சாரத்திறகு உடனடியாக முடிவு கட்டாவிட்டால், சிறிய குற்றங்களுக்கு கூட கள்ளத் துப்பாக்கியை பயன்படுத்தும் நிலை உருவாகிவிடும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் மனித உயிர்களுக்கு பாதுகாப்பே இல்லை என்ற நிலை ஏற்பட்டுவிடும். நூறு ரூபாய்க்காகக் கூட ஒருவரை சுட்டுக் கொல்லும்  அவலம் உருவாகிவிடும். அமெரிக்காவில் துப்பாக்கிகள் கட்டுப்பாடின்றி பயன்படுத்த அனுமதிக்கப்பட்டதன் விளைவு தான் அங்கு அடிக்கடி பள்ளிக்கூடத்தில் புகுந்தும், தொலைக்காட்சி நிலையத்திற்குள் புகுந்தும்  அப்பாவிகளை மர்ம நபர்கள் சுட்டுக் கொல்லும் கொடூரங்கள் அரங்கேறுகின்றன. கள்ளத் துப்பாக்கிக் கலாச்சாரத்திற்கு உடனடியாக முடிவு கட்டப்படாவிட்டால் தமிழகத்திலும் அதேபோன்ற துப்பாக்கிச்சூட்டு கொலைகள் நடக்கும் நிலை ஏற்படுவதற்கு அதிக காலங்கள் ஆகாது. தமிழகத்தில் ஏற்கனவே சட்டம் & ஒழுங்கு மிகவும் மோசமடைந்திருக்கிறது. கடந்த இரு நாட்களில் மட்டும் பார்த்தால், வேலூரில் ஒரு போக்கிலி அ.தி.மு.க.வின் முன்னாள் மாவட்ட செயலாளரின் ஆட்களால் கல்லால் அடித்தே படுகொலை செய்யப்பட்டிருக்கிறான்; திண்டுக்கல்லில் வழக்கறிஞர் ஒருவர் குடிப்பகத்தில் வைத்து கொல்லப்பட்டுள்ளார். இதுபோன்ற குற்றங்கள் தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் பெருளவில் நடந்துகொண்டு தான் இருக்கின்றன. 

 தமிழ்நாட்டில் கடந்த நான்கரை ஆண்டுகளில் 9000 படுகொலைகள், 88,500 கொள்ளைகள் உட்பட ஏராளமான குற்றங்கள் நடந்திருக்கின்றன. துப்பாக்கிகள் பெருகினால் நிலைமை மேலும் மோசமாகிவிடும். எனவே தமிழ்நாட்டில் கள்ளத் துப்பாக்கிகளை ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வாளர் தலைமையில் தனிப்படைகளை அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Friday, October 7, 2011

Print | E-mail சனிக்கிழமை, 8, அக்டோபர் 2011 (9:5 IST) 2016ல் பா.ம.க. ஆட்சி: ராமதாஸ் வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதா

Print | E-mail
சனிக்கிழமை, 8, அக்டோபர் 2011 (9:5 IST)


2016ல் பா.ம.க. ஆட்சி: ராமதாஸ்

வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்,


உள்ளாட்சிகளுக்கு அதிக அதிகாரம் வழங்க வேண்டும். இதனை நாங்கள் ஏற்கனவே வலியுறுத்தி வந்துள்ளோம். கல்வி, சுகாதாரம், குடிநீர், சாலை வசதி ஆகியவற்றுக்கு உள்ளாட்சிக்கு முழு அதிகாரம் வழங்க வேண்டும். இதற்கு முடிவு எடுத்து செயல்படுத்துகிற அதிகாரத்தை உள்ளாட்சிக்கு மாநில அரசு வழங்க வேண்டும்.


மாநிலத்துக்கு சுயாட்சி கேட்கிற திராவிட கட்சிகள் உள்ளாட்சி அமைப்புக்கு சுயாட்சி அதிகாரம் வழங்க வலியுறுத்தி பெற்று தர வேண்டும். மாநில அரசுகள் உள்ளாட்சிகளுக்கு 10 சதவீத நிதி மட்டுமே ஒதுக்கீடு செய்கிறது. 25 சதவீத நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.


சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குதண்டனையின் ஐகோர்ட்டின் 8 வாரகால அவகாசம் முடியும் தறுவாயில் உள்ளது. 3 பேரும் புதிய மனுக்களை கவர்னர், ஜனாதிபதிக்கு அனுப்பி உள்ளனர். தமிழக அமைச்சரவையில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.


நெல் கொள்முதல் விலையை அ.தி.மு.க. அரசு ரூ.1,500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். அதேபோல் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியதை போல் கரும்பு டன்னுக்கு ரூ.2,500 அளிக்க வேண்டும்.


ராமேஸ்வரம் மீனவர்களை தொடர்ந்து தற்போது நாகை மீனவர்களும் இலங்கை மீனவர்கள் மற்றும் கடற்படையினரால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டால் இலங்கை அரசு கடுமையான விளைவுகள் சந்திக்க வேண்டி வரும் என்று இந்திய அரசு எச்சரிக்க வேண்டும்.

தேர்தல் கமிஷன் உள்ளாட்சி தேர்தலை நேர்மையாக, நடுநிலையோடு நடத்த வேண்டும். தேர்தல் அமைதியாக நடைபெற தமிழ்நாட்டில் 10 நாட்களுக்கு டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும். சாராயம் இல்லாமல் இருந்தால் தேர்தல் அமைதியாக நடைபெறும்.


சட்டசபை தேர்தலில் நாங்கள் தனித்து நின்று இருந்தால் 40 50 தொகுதிகளில் வெற்றி கிடைத்து இருக்கும். 11 சதவீத புதிய வாக்காளர்கள் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்று அ.தி.மு.க.வுக்கு ஓட்டு அளித்துள்ளனர்.


பா.ம.க. இனிமேல், திராவிட கட்சிகள், தேசிய கட்சிகளுடன் இணையாது. தனித்து போட்டியிடும். வருகிற 2016 ல் பா.ம.க. ஆட்சி அமைத்து மக்களுக்கு நல்ல ஆட்சி கொடுப்போம்.


வேலூர் மாநகராட்சியில் 36 வார்டுகளில் பா.ம.க. போட்டியிடுகிறது. உள்ளாட்சி தேர்தலில் நாங்கள் பெருமளவில் வெற்றி பெறுவோம்.


இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

Tuesday, June 9, 2009

பெண்களுக்கான இட ஒதுக்கீடு:டாக்டர் ராமதாஸ்

கிருஷ்ணகிரி: பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உள் ஒதுக்கீடு கொண்டு வரவேண்டும். இந்த விஷயத்தில் சரத் யாதவ், முலாயம் சிங், லாலு ஆகியோர் கூறுவதை நான் முழுமையாக ஆதரிக்கிறேன் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

நிருபர்களிடம் அவர் பேசுகையில்,

இலங்கையை சேர்ந்த ஆறுமுக தொண்டைமான் மற்றும் சிவலிங்கம் ஆகிய எம்பிக்கள் திமுக எம்பி கனிமொழியை சந்தித்து, இலங்கை பிரச்னை குறித்து பேச்சு நடத்தியுள்ளனர். இந்த இருவரும், இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்காக பாடுபட்டவர்கள் அல்ல. இலங்கையில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அந்த கட்சியில் இவர்கள் அமைச்சர்களாக இருப்பர். விரைவில் இலங்கையில் தேர்தல் வர இருப்பதால் இவர்கள் நாடகம் ஆட ஆரம்பித்துள்ளனர்.

அதே போல உள்துறை அமைச்சர் சிதம்பரம் , முதல்வர் கருணாநிதியை சந்தித்து இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிவித்துள்ளார். இந்த இருவரும் தேர்தல் நேரத்தில், இலங்கையில் சண்டையை நிறுத்திவிட்டோம் என்று கூறி நாடகமாடியதை தமிழக மக்கள் மறக்கவில்லை.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரம் பகிர்ந்து கொள்வது குறித்து கருத்து தெரிவித்ததற்கு, இலங்கை ராணுவத்துறை செயலாளரும் அதிபர் ராஜபக்சேவின் தம்பியுமான கோதபய, இலங்கை விஷயத்தில் தலையிட நீ யார் என்று இந்தியாவை கேள்வி கேட்டுள்ளார். ராஜிவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தை குப்பையில் தூக்கி எறிவோம் என்றும் கூறியிருக்கிறார்.

பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு உள் ஒதுக்கீடு கொண்டு வரவேண்டும். இந்த விஷயத்தில் சரத் யாதவ், முலாயம் சிங், லாலு ஆகியோர் கூறுவதை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். உள் ஒதுக்கீடு இல்லாமல் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை நிறைவேற்ற கூடாது.

இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து வரும் 10ம் தேதி சென்னையில் கூடி முடிவெடுக்கவுள்ளோம். தற்போது, இந்த இயக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இல்லை.

தேர்தலில் தோற்று விட்டதாக பாமகவை திமுகவினர் ஏளனம் செய்கின்றனர். லோக்சபா தேர்தல் வெற்றி உண்மையானதல்ல. அது பணம் கொடுத்தும், மோசடி வேலை செய்து பெற்ற வெற்றி. வரும் 2011ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று அவர்களுக்கு பதிலடி கொடுப்போம்.

தேர்தலில் வெற்றி-தோல்வி சகஜம். கடந்த 1977ம் ஆண்டு முதல் 95ம் ஆண்டு வரை 7 தேர்தல்கள் நடைபெற்றன. அதில் 5 தேர்தல்களில் திமுக தோல்வி அடைந்துள்ளது. இரண்டு தேர்தலில் மட்டும் தான் வெற்றி பெற்றுள்ளது.

பிரபாகரன் உயிருடன் தான் இருக்கிறார். அவர் உரிய நேரத்தில் வெளியே வருவார் என்றார் ராமதாஸ்.

பணமில்லாமல் தேர்தலை சந்தி்க்க..

பின்னர் தர்மபுரி மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸ் பேசுகையில்,

நடந்து முடிந்த தேர்தலில் திமுக பண பலத்தால் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி குறித்து முதல்வர் கருணாநிதியின் மகன் ஸ்டாலின் கூறுகையில் பாமகவை போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் தோற்கடித்து விட்டோம் என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

பாமக போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் பணத்தை அள்ளி வீசி ஓட்டை விலை கொடுத்து வாங்கி வெற்றி பெற்றுள்ளனர்.

பணத்தால் சாதித்தது மட்டுமல்லாமல் சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் திட்டமிட்டு சில தில்லு முல்லுகளை செய்து வெற்றி பெற்றுள்ளனர்.

இனி வரும் காலங்களில் பணமில்லாமல் தேர்தலை சந்திக்க வேண்டுமானால் இப்போதே இளைஞர்களை தயார்படுத்த வேண்டும்.

தர்மபுரி மாவட்டத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் வன்னியர் கல்வி அறக்கட்டளை சார்பில் மகளிர் கல்லூரி தொடங்கப்படும். அதற்கான இடம் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே 15 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் விரைவில் பணிகள் ஆரம்பிக்கப்படும்.

மேலும் வன்னியர் கல்வி அறக்கட்டளை சார்பில் கோனேரி குப்பத்தில் கல்விக் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் என்ஜினீயரிங், சட்டம், விஷூவல் கம்யூனிகேசன் போன்ற பாடப் பிரிவுகள் கொண்டுவரப்பட உள்ளன.

அதில் தங்களது குழந்தைகளை சேர்த்து பயன் பெறலாம். விடுதி முதல் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும் என்றார்.

Tuesday, June 2, 2009

பாட்டாளி மக்கள் katchi

http://pattalimakkalkatchi.blogspot.com/